Hash Tag என்றால் என்ன?
ஹேஷ்டேக் #HashTag என்பது, எதாவது முக்கியமான குறிச்சொல் முன்னர் # என்று போடுவது. உதாரணமாக #ilaiyaraja இளையராஜா பற்றி யாரேனும் எதாவது ட்வீட்டுகின்றனர் என்றால் இந்த #ilaiyaraja ஹேஷ்டேகை அவர்களின் ட்வீட்டில் சேர்க்க வேண்டும். #ilaiyaraja என்கிற ஹேஷ்டேக் ட்வீட்டில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஹேஷ்டேகை யாரேனும் க்ளிக்கினாலோ, அல்லது தேடினாலோ, அந்த குறிப்பிட்ட ஹேஷ்டேக் உள்ள அனைத்து ட்வீட்டுகளையும் பார்க்க முடியும். ஆகையால், #ilaiyaraja என்ற ஹேஷ்டேகை க்ளிக்கும் போது இளையராஜா பற்றிய அனைத்து ட்வீட்டுகளையும் படிக்க முடியும்.
மிகவும் அதிகம் விவாதிக்கப்படும், பயன்படுத்தப்படும் ஹேஷ்டேக், ட்விட்டர் பக்கத்தில் trend listல் வரும். உதாரணமாக, சில வாரங்களுக்கு முன் நடந்த மும்பை குண்டுவெடிப்பின் போது #mumbaiblast என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டில் இருந்தது. இந்த ஹேஷ்டேகை படித்தவர்கள் உடனுக்குடன் மும்பை குண்டுவெடிப்பு பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.
16 ஜனவரி 2009ல் @Micah Baldwin என்பவர் “Iam starting Follow Fridays. Every Friday, suggest a person to follow, and everyone follow him/her” என்று ட்வீட்டினார். அதற்கு அவர் நண்பர் Mykl Roventine என்பவர் “@micah Great idea! You need a hashtag for that – #followfriday”. இது உடனடியாக தீப் போல் பற்றிக் கொண்டது. யார் யார் அவர்களுக்குத் தெரிந்த நல்ல ட்வீட்டர்களை பிறருக்கு அறிமுகப்படுத்த, இந்த #followfriday ஹேஷ்டேகை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.
முதலில் வெள்ளிக்கிழமை மற்ற சக ட்வீட்டர்களை அறிமுகப்படுத்த என்று ஆரம்பித்து பின்னர், என்றைக்கு வேண்டுமானாலும் பயன்படுத்தக் கூடியதாகி விட்டது. #followfriday மருவி #FF எனவும் ஆனது. ஆக, புதிதாக ஆங்கிலத்தில் ட்விட்டர்களைத் தேட விரும்புவோர் #followfriday அல்லது #FF என்று தேடினாலோ, இல்லை அந்த ஹேஷ்டேகுகளை கிளிக்கினாலோ போதும், பிறர் அறிமுகப்படுத்தும் பல ட்விட்டர்களை சுலபமாகக் கண்டுபிடித்துவிட முடியும்.